Hon’ble Ministers of the Government of Sri Lanka,
Hon’ble Minister of State of Fisheries, Animal Husbandry and Dairying of India Shri S. P. Singh Baghel ji,
Hon’ble Members of Parliament Dr. Medha Vishram Kulkarni ji and Dr Laxman ji
இந்திய வம்சாவளித் தமிழர் சமூகத்தின் தலைவர்களே,
இந்திய தூதர் திரு சந்தோஷ் ஜா அவர்களே,
இந்திய வம்சாவளியினரே,
பெரியோர்களே தாய்மார்களே
சகோதர சகோதரிகளே
என் அன்புக்குரிய தமிழ் மக்களே
உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் வணக்கம்..
உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
முதலில், தற்போது தொடங்கியுள்ள தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் சிறப்பான வளம் மிகுந்த மகிழ்ச்சியான ஆண்டாக அமைய என் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மண்டபத்திற்குள் நான் நுழையும் போது— வாழைமரம், தென்னங்கீற்று, பலவித மலர்கள் நிரம்பிய அலங்காரங்களால் ஆன சூழலைக் காணும்போது—நான் என் சொந்த ஊரில் இருப்பதைப் போன்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது.
பக்கத்துக்கு நாட்டுக்கு வந்த உணர்வு இல்லை. பக்கத்துக்கு வீட்டுக்கு வந்த உணர்வு எனக்கு.
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர் சமூகம், இரு நாடுகளுக்கிடையே ஒரு உயிர்ப்புள்ள உறவுப் பாலமாக விளங்குகிறார்கள் என்றால் அது மிகையல்ல.
ஊட்டியிலிருந்து ஹட்டன் வரை,திருச்சியிலிருந்து தலவாக்கலை வரை,இராமநாதபுரத்திலிருந்து ரம்போடா வரை,மதுரையிலிருந்து மஸ்கெலியா வரை—
நமது “தொப்புள்கொடி உறவு” இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருக்கிறது. மேலும் மேலும் வலிமை அடைந்து வருகிறது என்பது நமக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இலங்கையில் பல துறைகளில் இந்திய வம்சாவளித் தமிழர் சமூகமானது வளர்ச்சி பெற்று முன்னேறி வருவது மிகுந்த பாராட்டுக்குரியது, மகிழ்ச்சிக்குரியது.
1800களின் தொடக்கத்தில்,பிரிட்டிஷ் ஆட்சியினரால் தோட்டத் தொழிலாளர்களாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்திய வம்சாவளியினர்— இன்று, அரசியல், நீதித்துறை,வர்த்தகம் மற்றும் சுற்றுலா,ஊடகம் —எனப் பல துறைகளில் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளனர்.
உங்கள் முன்னேற்றமும், சமூக உயர்வும்— இங்கே உள்ள இந்திய வம்சாவளியினருக்கு மட்டுமல்ல, இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு பெருமையையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. தமிழ்த்தாயின் மகனாக—உங்கள் முன்னேற்றமும் வளர்ச்சியும் எனக்கு அளப்பரிய மகிழ்ச்சியை தருகிறது.
இலங்கையில் முழுமையாக இணைந்திருந்தாலும்— உங்கள் பூர்வீக வேர்களை நீங்கள் மறந்துவிடவில்லை. திருமணம்,கல்வி,வணிகம்—எனப் பல துறைகளில் தலைமுறை தலைமுறையாக உறவுகளை வளர்த்துக் கொண்டு வருகிறீர்கள். அது மன நிறைவைத் தருகிறது
இந்திய அரசும், இந்திய மக்களும்— உங்களை எப்போதும் தங்கள் இதயத்தில் வைத்துள்ளனர் என்பதை உங்களுடன் கூறிக்கொள்ள நான் கடமைப் பட்டுள்ளேன் .
நம் மரபு என்பது உலக ஒற்றுமையை போற்றுவது ஆகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் தமிழ்ப் புலவன் கணியன் பூங்குன்றனார் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பாடினார். அது உலகம் முழுதும் தமிழரின் விருந்தோம்பல் முறையை உணர வைத்தது.
பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் ஐநா சபையில் அப்பாடலை எடுத்துரைத்து உலக அரங்கில் தமிழனின் பெருமையை போற்றினார்.
இலங்கை அரசின் வீட்டு வசதி திட்ட முயற்சிகளை இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இந்திய வீட்டு வசதி திட்டத்தின் மூன்றாம் கட்டம் முறையாக நிறைவு பெற்றதை மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இன்று வழங்கப்படும் 145 வீடுகளுடன் சேர்த்து மூன்றாம் கட்டத்தின் கீழ்— 4,000 வீடுகள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுவரை இலங்கை மக்களுக்கு சுமார் 50,000 வீடுகளை இந்திய அரசு வழங்கி உள்ளது. மேலும் 10000 வீடுகள் நான்காம் கட்டம் மூலம் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இவை அனைத்தும் சொல்லும் செய்தி ஒன்றுதான். தமிழ் மக்கள் இந்தியாவின் உறவுப்பாலங்கள். இந்தியா என்றும் உங்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பதைத்தான் இவை காட்டுகிறது.
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள்—2017ஆம் ஆண்டு இலங்கையின் மலையகப் பகுதிக்கு மேற்கொண்ட வருகை அத்தகைய உங்கள் நலன்கள் மீதான உணர்வின் வெளிப்பாடுதான். மலையகப் பகுதிகளுக்கு நேரில் சென்ற ஒரே இந்திய பிரதமரும் அவரே.
அப்போது— இந்திய மானிய உதவியுடன் கட்டப்பட்ட டிக்கோயாவில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையை அவர் திறந்து வைத்தார். அந்த மருத்துவமனை— இன்று அந்தப் பகுதியின் மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி வருவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும், இந்திய அரசின் வீட்டுவசதி உதவித் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ்— 10,000 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அவர் அப்போது அறிவித்தார்.அது தற்போது நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.
சகோதர சகோதரிகளே,இந்தியா இன்று “அனைவருக்குமான வளர்ச்சி” என்ற நோக்கத்தின் அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்தக் கோட்பாட்டை—இலங்கையிலும் எங்கள் மேம்பாட்டு கூட்டாண்மையின் (Development Partnership) மூலம் நடைமுறைப்படுத்த நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.
இந்திய இலங்கை பொருளாதார வளர்ச்சியில் இந்த இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதன் மூலம் பெரும் முன்னேற்றம் ஏற்படும்.
2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற மாநில வருகையின் போது—பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள்— சீதை அம்மன் கோவிலின் மேம்பாட்டிற்கு ஆதரவு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இது இந்தியா இலங்கை இடையேயான யுகத் தொடர்பை போற்றும் முயற்சி. இதற்கு பிரதமர் மோடி அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
பல்வேறு உதவி வழிமுறைகளின் கீழ்— 7.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான திட்டங்களுடன்— இலங்கையின் முழுமையான வளர்ச்சிக்காக பாரத தேசம் உறுதியாக செயல்பட்டு வருகிறோம்.
இலங்கைக்கு ஒரு இன்னல் என்றால் ஓடி வந்து உதவும் நாடு இந்தியா. அது ஒரு கடமை.
இந்திய வம்சாவளித் தமிழர் சமூகத்திற்கான எங்கள் ஆதரவு—இந்த மொத்த முயற்சியின் ஒரு பகுதியாக—அந்த சமூகத்தின் செழிப்பான மற்றும் கண்ணியமான எதிர்காலத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் உள்ளது.
கடந்த ஆண்டு—பிரதமர் மோடி அவர்கள் இலங்கை வருகையின் போது—இந்திய வம்சாவளித் தமிழர் சமூகத்தினர்—OCI அட்டை பெறுவதில் எதிர்கொள்ளும் சிக்கல்களை அவரிடம் பகிர்ந்துகொண்டனர். தேவையான ஆவணங்கள் இல்லாதது—OCI திட்டத்திற்கு தகுதி பெறுவதில் தடை ஏற்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டப்பட்டது. இளைஞர்களும்— OCI அட்டையைப் பெறுவதில் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.
அது—ஒரு அடையாளமாக மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்தின் வாய்ப்புகளை இந்திய குடிமக்களைப் போலவே இந்திய வமசாவாளியினரும் பயன்படுத்தும் நோக்கத்துடனும் இருந்தது.
என் அன்பு சகோதர சகோதரிகளே, நமது உறவு—ஒரு குடும்ப உறவாகும்.உங்கள் கோரிக்கைகளின் அடிப்படையிலும், பிரதமரின் முன்முயற்சியின் பேரிலும்— இந்திய அரசு இந்த சிக்கல்களைத் தீர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதனைச் சார்ந்து— இரண்டு முக்கியமான நடவடிக்கைகளை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முதலில்—இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர் சமூகத்திற்காக— OCI திட்டத்தை ஆறாம் தலைமுறைவரை விரிவுபடுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று சாதனை
இரண்டாவது அறிவிப்பு — OCI அட்டைக்கான விண்ணப்ப நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசு வழங்கும் சான்றிதழ்களும்— இனி இந்திய வம்சாவளிக்கான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும். இந்த மாற்றம்—இந்திய ஆவணங்கள் இன்றி இலங்கைக்கு வந்த தோட்டத் தொழிலாளர் தமிழர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
தலைமுறைகள் தலைமுறைகளாக நம் உறவை வலுப்படுத்த இந்த இரண்டு அறிவிப்புகளும்— நமது தொடர்ந்த உறவிற்கும், உறவுப்பிணைப்பிற்கும் வழி வகுக்கும் என தெரிவித்துக் கொள்வதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன், சிலோன் எஸ்டேட் தொழிலாளர் கல்வி அறக்கட்டளை Ceylon Estate Workers’ Education Trust (CEWET)மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை மேம்படுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். . இந்த மேம்பாடு—உதவித்தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையையும், ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் தொகையையும் பெருமளவு அதிகரிக்கும்.
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை" என்கிறார் திருவள்ளுவர்.
கல்வியே ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் என்றும், கல்வியைத் தவிர மற்றப் பொன், பொருள் போன்றவை உண்மையான செல்வங்கள் ஆகாது என்று வள்ளுவர் கூறுகிறார்.
நம் தமிழ் மாணவர்களின் கல்வி முயற்சிக்கு இந்திய அரசு என்றும் துணை இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் அன்பு சகோதர சகோதரிகளே, "Blood is thicker than water " ‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்’ என்பார்கள். உங்கள் வெற்றி— நம்முடைய வெற்றி. உங்கள் சிரமங்கள்— நம்முடைய சிரமங்களே.
இந்த உணர்வே—அவசர காலங்களில்— உங்களுக்கு உடனடியாகவும், தன்னிச்சையாகவும் உதவிசெய்யவும்,உங்கள் தேவைகளுக்கு விரைவாக பதிலளிக்கவும் எங்களைத் தூண்டுகிறது.
டித்வா புயலால் ஏற்பட்ட பேரழிவை— குறிப்பாக இலங்கையின் மலைநாட்டு பகுதிகளில் ஏற்பட்ட பேரழிவை—அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்திய வம்சாவளித் தமிழர் பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்ததை அறிந்தும், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்து, இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளை உடமைகளை இழந்ததை அறிந்தும் நான் மிகவும் வருத்தமுற்றேன்.
இந்நேரத்தில்,உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், புயலால் பாதிப்படைந்த அனைத்து மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்ற குறளுக்கு ஏற்ப நாங்கள் காத்திருக்கவும் இல்லை, தாமதிக்கவும் இல்லை. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, எப்போதும் முதலில் உதவும் (First Responder) எங்கள் நிலைப்பாட்டின்படி, டித்வா புயல் இலங்கையை தாக்கிய அதே நாளிலேயே பாரதப் பிரதமர் திரு மோடி ‘சாகர் பந்து’ (Operation Sagar Bandhu) நடவடிக்கை தொடங்கப்பட்டது.
அவசர உதவி பொருட்கள்,.உணவுப் பொருட்கள், நிவாரணப் பொருட்கள்— அனைத்தையும் உடனடியாக வழங்கினோம். மருத்துவ குழுக்கள் மூலம் விரைவான நிவாரண பணிகளை மேற்கொண்டதை தாங்கள் அறிவீர்கள்.
மேலும்—தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில்— உங்கள் அரசின் முயற்சிகளுக்கும் நாங்கள் பங்களித்தோம்.
பிரதமர் மோடி அவர்கள்— இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை— தமது சிறப்பு தூதராக உடனே இலங்கைக்கு அனுப்பினார்.
நமது ஒற்றுமையை வெளிப்படுத்தவும், 450 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான உதவி தொகுப்பை அறிவிக்கவும் இந்த வருகை மேற்கொள்ளப்பட்டது.
எங்களின் இந்த உடனடி உதவி, இந்திய வம்சாவளித் தமிழர் மீதான எங்கள் தொடர்ச்சியான அக்கறையின் வெளிப்பாடு ஆகும். அது எங்கள் கடமையும் ஆகும். நாங்கள் எப்போதும் உங்களுக்கு உதவ ஓடோடி வருவோம், உற்ற துணையாக என்றும் இருப்போம் என்பதை இந்நேரத்தில் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த உதவி தொகுப்பு— இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் மீள்கட்டுமான முயற்சிகளுக்கு ஆதரவாக உள்ளது. புயலால் ஏற்பட்ட சேதம்—மலைநாட்டு பகுதிகளில் அதிகமாக இருந்ததால்—இந்த உதவி தொகுப்பு அந்தப் பகுதிக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது.
சாலை மற்றும் ரயில் இணைப்புகளை— மீண்டும் நிறுவுவதில்— நாங்கள் ஏற்கனவே கணிசமான முன்னேற்றத்தை எட்டியுள்ளோம்.
தற்காலிக தங்குமிடப் பொருட்களை வழங்குவதற்கும்— முழுமையாக சேதமடைந்த 4,000 வீடுகள் மற்றும் சேதமடைந்த சுமார் 3,000 வீடுகளை மீண்டும் கட்டுவதற்கும் நாங்கள் உறுதி அளித்துள்ளோம். மேலும்— சுகாதாரம், கல்வி,வேளாண்மை துறைகளில் புயலின் தாக்கத்தை குறைக்கும் முயற்சிகளிலும் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.
இலங்கையில் இந்தியாவின் மிகப் பழமையான தூதரக அலுவலகமான— கண்டியில் உள்ள துணை உயர் ஸ்தானிகரகம் முதன்மையாக உங்கள் நலன்களைப் பாதுகாக்கவே அமைக்கப்பட்டது என்பதை தாங்கள் அறிவீர்கள்.
உங்கள் நலனே—இந்தியா–இலங்கை உறவின் மையக் கருத்தாகத் தொடர்ந்து உள்ளது. “Neighbourhood First” என்ற இந்தியாவின் கொள்கை— நமது இரு நாடுகளுக்கிடையேயான இந்த அபூர்வமான மக்களுக்கு இடையேயான உறவிலிருந்து உருவானது. இன்றைய நிலையில்—நமது உறவு அசாதாரண நம்பிக்கையும் நல்லிணக்கமும் கொண்டதாக உள்ளது.
COVID-19 தொற்று, பொருளாதார நெருக்கடி, டித்வா புயல், மேற்காசிய மோதலால் ஏற்பட்ட விநியோக சிக்கல்கள், Energy Crisis — இவற்றைப் போன்ற பல சவால்களையும் எதிர்கொண்டபோதும்— நமது நாடுகளுக்கு இடையிலான உறவு தன்னுடைய நம்பகத்தன்மையையும் நிலைத்தன்மையையும் தொடர்ந்து நிரூபித்துவருகிறது. தனக்கே பல பிரச்சினைகள் இருந்த போதும் இந்தியா உதவியது.
இன்று—மாண்புமிகு ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க அவர்களுடன் நடைபெற்ற உரையாடலில் இந்தியா–இலங்கை உறவின் பல்வேறு அம்சங்களை பற்றி நாங்கள் விரிவாக கலந்துரையாடினோம் .
மிகவும் சவாலான உலக சூழலில்— அரசியல் மறறும் பொருளாதார இணைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பேசினோம்.
“சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என சுப்பிரமணிய பாரதியார் பாடினார். அது இன்று உறவுப்பாலமாக வலுப்பெற்று வருகிறது.
இந்தப் பாலம்— நமது பாரம்பரிய உறவுகள்,பூர்வீகம், பொதுவான இலக்குகள் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைக்கப் பட்டுள்ளது
சகோதர சகோதரிகளே, இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டுறவு ,நூற்றாண்டுகளாக நிலைத்துள்ள நமது “தொப்புள்கொடி உறவை”— மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இனிமையான காலங்களிலும், கடினமான காலங்களிலும்—உங்கள் சகோதரனாக— இந்தியா என்றும் உங்கள் மகிழ்ச்சியிலும் துயரத்திலும் மூத்த சகோதரனாக துணை நிற்கும்.
உங்கள் அனைவரையும் சந்தித்து உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
வணக்கம்!









